சிரேஷ்ட DIG தேசபந்து தென்னகோன் மீதான அழைப்பாணை இரத்து

- சட்ட மாஅதிபரின் கோரிக்கையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது
- மே 09 சம்பவத்தில் கைது செய்வதை தடுத்து CID யிற்கும் உத்தரவு

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று மேன்முறையீட்டு நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை 09ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட வேளையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபராக ஆஜராகுமாறு மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணை செல்லுபடியாகாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களால் ரூ. 17.8 மில்லியன் மீட்கப்பட்டமைக்கு உடந்தைதயாகவும் அதற்கு தூண்டுதலாகவும் இருந்ததாக, DIG தேசபந்து தென்னகோன் மீது சாட்டப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நீதிமன்றின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை வெளியிடப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த வருடம் மே 09ஆம் திகதி காலி முகத்திடல் பிரதேசத்தில் இடம்பெற்ற 'கோட்டா கோ கம' போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் தேசபந்து தென்னகோனை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்ட மா அதிபரினால் விடுக்கப்பட்ட கடிதத்தையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லுபடியற்றதாக, எழுத்தாணை உத்தரவொன்றையும் வெளியிட்டுள்ளது.

அத்துடன், மே 09 காலி முகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்வதை தடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றுமொரு எழுத்தாணை உத்தரவொன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...