- அமெரிக்க காங்கிரஸில் பிரதமர் மோடி
உலகிலுள்ள அனைத்து நம்பிக்கைகளதும் இல்லமாக விளங்கும் இந்தியா அவை அனைத்தையும் கொண்டாடுவதாகவும் எமது நாட்டில் இயற்கையான வாழ்க்கை முறையே பன்முகத்தன்மை கொண்டது தான் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'எமது நாட்டில் 2500 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் 20 க்கும் மேற்பட்ட வெவ்வேறு அரசியல் கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களை ஆட்சி செய்கின்றன. எமது நாட்டில் 22 உத்தியோகபூர்வ மொழிகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைமொழிகள் காணப்படுகின்றன. இருப்பினும் நாம் ஒரே குரலில் பேசுகிறோம். அதனால் இந்தியாவைப் பற்றி மேலும் மேலும் அறிய உலகம் விரும்புகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
'அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றுவது மிகப்பெரிய கௌரவம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'எங்களது கூட்டாண்மை ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதொரு முன்னறிவிப்பாகும். உலகிற்கு சிறந்த எதிர்காலத்தையும் எதிர்காலத்திற்கு சிறந்த உலகத்தையும் நாம் ஒன்றாக வழங்குவோம்' என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார நிலைமை குறித்து தம் உரையில் குறிப்பிட்ட இந்தியப் பிரதமர், 'நான் பிரதமராகி முதற்தடவையாக அமெரிக்காவுக்கு வருகை தந்த போது எமது பொருளாதாரம் உலகின் 10 வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இன்று அது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி பெற்றுள்ளது. என்றாலும் நாம் விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேற்றமடைவோம். இந்தியா வளர்ச்சி அடையும் போது முழு உலகுமே வளர்ச்சி அடையும்' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Add new comment