மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தில் விமரிசையான விழா
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் நடத்திய எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜனின் இலக்கியப் பயணத்தின் பொன்விழா நிகழ்வும், 'இலக்கியத் தென்றல்' மலர் வெளியீடும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளர் கலாநிதி மு.கோபாலரெத்தினம், கொழும்பு தேசிய கல்வி நிறுவக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் முனைவர் முருகு தயாநிதி மற்றும் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளரும், ஆய்வாளருமான சட்டத்தரணி பாடும்மீன் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு வெளியீடு செய்யப்பட்ட 'இலக்கியத் தென்றல்' மலரின் முதல் பிரதியை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் கலாநிதி மு.கோபாலரெத்தினம் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் பிரமுகர்களுக்கு சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பொன்விழா நாயகன் கோவிலூர் செல்வராஜன் தொடர்பான அறிமுகவுரையினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கப் பொதுச்செயலாளர் மு.கணேசராஜாவும், இங்கு வெளியீடு செய்யப்பட்ட 'இலக்கியத் தென்றல்' மலர் தொடர்பான ஆய்வுரையினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் உதவி விரிவுரையாளர் முருகையா சதீஸூம், வாழ்த்துரையினை எழுத்தாளரும், கவிஞரும், பாடலாசிரியருமான பாவேந்தல் பாலமுனை பாறூக்கும், ஏற்புரையினை கோவிலூர் செல்வராஜனும் நிகழ்த்தினர்.
பொன்விழா நாயகன் கோவிலூர் செல்வராஜன் கிழக்கின் புகழ்பூத்த கலைஞர்களோடு இணைந்து மட்டக்களப்பு மண் சார்ந்த பாடல்களைப் பாடி நிகழ்வில் கலந்து கொண்டோரை மகிழ்வித்தார்.
அத்தோடு இவரை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தினர் உட்பட பல்வேறு இலக்கிய அமைப்புக்கள் பொன்னாடை போர்த்திப் பாராட்டிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
க.கிருபாகரன்
கல்லடி
Add new comment