போதகர் ஜெரோமிடம் அதிகளவு சொத்துக்கள்

- ரூ.33 பில்லியன் செலவில் 'மிராக்கல் டோம்' கட்டடம்
- விசாரணை நடத்தி வெளிக்கொணர சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன PC உயர் நீதிமன்றில் வாதம்
- ஜெரோமின் ஆன்மீகத் தலைவர் சிம்பாப்வேயில் நிதி முறைகேடு மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்

பௌத்த மதம் உட்பட ஏனைய மதங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ ஆன்மீகக் கூட்டங்களை நடத்தும் 'மிராக்கல் டோம்' என்ற கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு 3.3 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாகவும் அந்தளவு பாரிய தொகை அவருக்கு எவ்வாறு கிடைத்துள்ளது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அவரது ஆன்மீக தலைவராகக் கருதப்படும் 'ஊபர்ட் ஏஞ்சல்' என்பவர் சிம்பாப்வே நாட்டில் நிதி முறைகேடு மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி தங்க விற்பனை தொடர்பிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்பதையும் அவர் நீதிமன்றத்துக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அவரது செயற்பாடுகள் 14 நாடுகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மதங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றத்துக்காக குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைதுசெய்யவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதனை இரத்துச்செய்யக்கோரி இடைக்கால தடையுத்தரவொன்றை விடுக்குமாறு தாக்கல்செய்துள்ள அடிப்படை உரிமை மனுமீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் இடம்பெற்றபோதே, சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளான எஸ். துரைராஜா, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது. அதன்போது அந்த மனுமீதான விசாரணயை எதிர்வரும் 28 ஆம் திகதி நடத்துவதற்கு நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள மனுவை இரத்துச் செய்யுமாறு கோரி இடைத்தரப்பினர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். அதற்கிணங்க எல்லே குணவன்ச தேரர் உள்ளிட்ட அந்த 07 மதத் தலைவர்கள் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன, விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த, இந்து, இஸ்லாம் மதங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளாரென அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அதற்கு எதிராக இந்த இடைத்தரப்பினர் உச்ச நீதிமன்றத்திற்கு இதற்கு முன்பு அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்செய்துள்ளதுடன் அந்த மனுமீதான விசாரணை முன்னெடுக்கப்பட்ட போது, போதகரான ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொள்வதென சட்ட மாஅதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளாரென சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த விடயங்கள் தொடர்பிலான முன்னேற்றம் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி விசாரணையை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கு மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன, இந்த மனு தொடர்பில் விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் இடைப்பட்ட தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதனை மேற்கொள்ள முடியாது.

அந்த இடைப்பட்ட தரப்பினர் இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக கூறப்படும் அடிப்படை உரிமை மனுவுடன் சம்பந்தப்பட்ட எந்த ஆவணமும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமது தரப்பினருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வெளிநாட்டிலுள்ள அவர் நாடு திரும்பும் போது கைது செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறானால் இந்த மனு தொடர்பில் விடயங்களை முன் வைப்பதற்கு திகதியொன்றை பெற்றுத் தருமாறும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். எனினும் இடைப்பட்ட தரப்பினர் மனு தொடர்பில் தான் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பிரியந்த தாவான, எவ்வாறாயினும் மேற்படி இடைத்தரப்பு மனு தொடர்பில் தாமும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விடயங்களை கவனத்திற்கொண்ட நீதிமன்றம் இடைத்தரப்பினரின் மனுவுக்கு அனுமதி வழங்கியதுடன் அது தொடர்பான எதிர்ப்புகளை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறும் பிரதிவாதிகள் தரப்புக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...