பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம்; 3 தினங்கள் தொடர் பேச்சுவார்த்தை

- நிறுவனங்கள், அமைப்புகளின் யோசனையை பெற தீர்மானம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 14,15மற்றும் 16ஆம் திகதிகளில் நீதி அமைச்சில் நடைபெறவுள்ளது.

உத்தேச சட்ட மூலம் தொடர்பில் நிறுவனங்கள், அமைப்புகளின் பரிந்துரைகள், கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் இந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளமுடியும் என்றும் கலந்துரையாடலுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளும் வகையில் இந்த கலந்துரையாடலில் பங்கு பெற்ற விரும்புவர்கள் எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதிக்கு முன்பதாக [email protected] என்ற ஈமெயில் அல்லது 0112470822 இலக்க பெக்ஸ் மூலமாக நீதி அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள 1979- 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்ட மூலம் ஒன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, விசேட நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்து இந்த சட்டமூலத்தை நீதியமைச்சு தயாரித்துள்ளது.

அந்த சட்ட மூலம் கடந்த மார்ச் 17 வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. documents.gov.lk என்ற இணையதளத்தில் இதனை பார்வையிட முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

-லோரன்ஸ் செல்வநாயகம்
 


Add new comment

Or log in with...