ஆசிய கிண்ணம் குறித்த இறுதி முடிவு ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்குப் பின்னர்

ஆசிய கிண்ணத்தை நடத்தும் நாடு அல்லது நாடுகள் குறித்த இறுதி முடிவு இந்திய பிரிமியர் லீக் இறுதிப் போட்டியின்போது எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறவுள்ள ஐ.பி.எல் இறுதிப் போட்டியை பார்வையிட ஆசிய கிரிக்கெட் கெளன்சிலின் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்கவுள்ள நிலையிலேயே ஜெய் ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“ஆசிய கிண்ணத்தை நடத்துவது தொடர்பிலான இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. நாம் ஐ.பி.எல் தொடரில் அதிக வேலைப்பளுவுடன் இருந்தபோதும் இலங்கை கிரிக்கெட் சபை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கான் கிரிக்கெட் சபைகளின் உயர்மட்ட பிரமுகர்கள் ஐ.பி.எல் இறுதிப் போட்டியை காண வருகிறார்கள். அப்போது நாம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவொன்றை எடுப்போம்” என்று ஜெய் ஷா பீ.டீ.ஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கெளன்சிலின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஆசிய கிண்ணத்தை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. எவ்வாறாயினும் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப அந்நாட்டு கிரிக்கெட் சபை மறுத்துள்ளது. இதனை அடுத்து இரு நாடுகளில் போட்டியை நடத்தும் வகையில் கலக்கு முறை ஒன்றுக்கு பாக். கிரிக்கெட் சபை பரிந்துரைத்துள்ளது.

இந்த முறையின் கீழ் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் இந்தியா பங்கேற்றும் போட்டிகள் பொது இடத்திலும் நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் பொது இடமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரும்புகின்றபோதும் செப்டெம்பரில் அங்கு நிலவும் கடும் வெப்பத்தை காரணம் காட்டி பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டு ஆசிய கிண்ணத் தொடர் வரும் செப்டெம்பர் 1 தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடாகியுள்ளது.


Add new comment

Or log in with...