கைதை தடுக்கும் உத்தரவு கோரி ஜெரோம் பெனாண்டோ உயர் நீதிமன்றில் மனு

மதங்கள் தொடர்பில் புண்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோ உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தாம், குற்றப் புலனாய்வினர் கைது செய்வதை தடுக்கும் வகையில்  அத்திணைக்களத்திற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அத்திணைக்களத்தின் பணிப்பாளர், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோரின் பெயர்கண் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், தம்மை சட்டவிரோதமான முறையில் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்மானித்து, தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதங்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பிரசங்கம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெனாண்டோ இலங்கை வந்தடைந்ததும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...