- சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகம்
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்படடுள்ளார்.
நேற்றையதினம் (25) பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், ஜாஎல, வெலிகம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய ஒருவரை இவ்வாறு சடலமாக மீட்டுள்ளனர்.
குறித்த நபர் கைகள் கட்டப்பட்டு வாயை மூடிய வகையில் துணியினால் கட்டப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் மகள் தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த போது நுழைவாயில் கதவும் வீட்டுக் கதவும் வெளியில் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, தந்தைக்கு என்ன நடந்தது என தொடர்ந்தும் தேடிய அவர், இவ்வாறு உயிரிழந்து சடலமாக கிடப்பதை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
ஒரு சில தினங்களுக்கு முன்னர் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Add new comment