பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் 131 மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் கடந்த ஆண்டுகளைப் போலவே திறமை சித்தி பெற்ற இலங்கை உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வினை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) புதன்கிழமை (24) ஏற்பாடு செய்திருந்தது.

இந்த புலமைப்பரிசில்கள் 2006 ஆம் ஆண்டு முதல் இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 2400 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானின் ஸ்தாபக தந்தையான முஹம்மது அலி ஜின்னாவின் பெயரால் வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இந்நிகழ்வில்  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ. அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் உரையாற்றிய அவர், பாகிஸ்தான் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் இப்புலமைப்பரிசில் செயல் திட்டத்தை பாராட்டியதோடு இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இதுபோன்ற முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இளைஞர்களே எமது எதிர்காலம் எனவும், இவ்வாறான புலமைப்பரிசில் திட்டங்களின் மூலம் எமது எதிர்கால சந்ததியினரை நாம் வலுப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் உமர் பாரூக் பர்கி,

"இந்நிகழ்வுக்கு வருகை தந்து  சிறப்பித்தமைக்காக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு நன்றி தெரிவித்ததோடு இரு நாடுகளும் அனுபவிக்கும் உறவின் முக்கியத்துவத்தையும், இந்த உறவினை மேலும் வலுப்படுத்துவதை பாகிஸ்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார். ஜின்னா புலமைப்பரிசில் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பிணைப்புக்கு ஒரு சிறந்த சான்றாகும் என்றும் சிறந்த கல்வி வாய்ப்புகளுடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். 2006 ஆம் ஆண்டு முதல் திறமையான இலங்கை மாணவர்களுக்கான ஜின்னா புலமைப்பரிசில்களை பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த புலமைப்பரிசிளுக்கு இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் தகுதி பெற்ற மாணவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். தெரிவுசெய்யப்பட்ட சிங்கள, தமிழ் (67) மற்றும் முஸ்லிம் (74) மாணவர்களின் விகிதாசாரமும் ஏறக்குறைய சமமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை (87) ஆண் மாணவர்களின் எண்ணிக்கையை விட (44) கிட்டத்தட்ட இரு மடங்காக இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்தது. மேலும், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பிற துறைசார்ந்த வல்லுநர்களை பல்வேறு பீடங்களில் முழு நிதியுதவி புலமைப்பரிசில் திட்டங்கள் மூலம் உருவாக்குவதில் பாகிஸ்தான் அரசு பெருமை கொள்கிறது." என்றார்.

இவ்விழாவில், அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநர், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மற்றும் பிரதி உயர் ஸ்தானிகர் ஆகியோரால் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், தூதர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாகிஸ்தானின் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Add new comment

Or log in with...