வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டி எடுக்கும் பணி முன்னெடுப்பு

- நீதிமன்ற உத்தரவுக்கமைய புதிய பிரேத பரிசோதனை

மர்மமாக மரணித்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணிகள் தற்போது பொரளை பொது மயானத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கான பிரேத பரிசோதனைக்காக, அவரது சடலத்தை தோண்டி எடுக்க அனுமதி வழங்குமாறு, அவரது மரணம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்தியர்கள் குழு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றைய தினம் (25) சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், விசேட பொலிஸ் பாதுகாப்புடன், சட்டத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதை அறிய, கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி, புதிதாக பிரேத பரிசோதனை செய்ய ஐந்து பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவை நீதிமன்றம் நியமித்தது.

ஐந்து பேர் கொண்ட குறித்த குழுவில் பேராசிரியர் அசேல மெண்டிஸ் (தலைவர்) பேராசிரியர் பி.சி.ஆர். பெரேரா, பேராசிரியர் டி.எச்.எஸ். பெனாண்டோ மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளான வைத்தியர் சிவ சுப்ரமணியம் மற்றும் வைத்தியர் பி.ஆர். ருவன்புர ஆகியோர் அடங்குகின்றனர். தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை தீர்மானிக்க புதிய விசாரணையை மேற்கொள்ள அவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்

தினேஷ் ஷாப்டர், பொரளை பொது மயானத்தில் கடந்த வருடம் டிசம்பர் 15ஆம் திகதி, அவரது காருக்குள் கழுத்தில் பட்டியால் இறுக்கப்பட்டு மர்மமாக மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அன்றிலிருந்து அவரது மரணத்திற்கான காரணத்தையும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பிலும்  விசாரணகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...