பொருளாதார மறுமலர்ச்சிக்கென முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள்

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று வந்த நாடு, தற்போது பொருளாதார மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் நிமித்தம் பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தின் முற்பகுதியில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்த இந்நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்புவதையும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதனை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் குறுகிய காலப்பகுதி முதல் பயனளிக்கத் தொடங்கியுள்ளன.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியிலும் சுபீட்சத்திலும் முழுக்கவனமும் செலுத்தப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், நாட்டுக்குள் அந்நிய செலாவணி வந்து சேர்வதையும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதையும், மக்கள் நெருக்கடிகள் இன்றி அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏற்ப வருமானத்தை ஈட்டிக்கொள்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாகவும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டினதும் மக்களினதும் நலன்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டங்களின் அடிப்படை நோக்கம் நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியே அன்றி வேறில்லை. பொருளாதார முன்னேற்றத்தின் தேவையும் முக்கியத்துவமும் பரவலாக உணரப்பட்டுள்ளதன் வெளிப்பாடே அதுவாகும். பொருளாதார ரீதியில் முன்னேற்றப்பாதையில் பயணிக்கும் போதுதான் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளைக் குறைத்துக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். கொவிட் 19 பெருந்தொற்று தோற்றம் பெற்ற பின்னர் மக்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார ரீதியிலான பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண பொருளாதார முன்னேற்றம் இன்றியமையாததாக விளங்குகிறது.

அந்த வகையில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு நாட்டில் புதிதாக ஆறு முதலீட்டு வலயங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் இந்த முதலீட்டு வலயங்கள் திட்டமும் அடங்கியுள்ளன.

நாட்டில் பல முதலீட்டு வலயங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மேல்மாகாணத்தில் அமைந்துள்ளன. இந்த முதலீட்டு வலயங்கள் நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கி வருகின்றன. அந்நிய செலாவணியின் வருகைக்கு பங்களிக்கின்றன.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கு, வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களைக் கருத்தில் கொண்டு முதலீட்டு வலயங்கள் அமைக்கப்பட உள்ளன. திருகோணமலை, மாங்குளம், பரந்தன், காங்கேசன்துறை, இரணவில, பிங்கிரிய ஆகிய பிரதேசங்கள்தான் இந்த முதலீட்டு வலயங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதனை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உறுதிப்படுத்தியுள்ளார். அத்தோடு மகாவலி ஏ மற்றும் எச் வலயங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்றுமதி பயிர்ச்செய்கையும் ஊக்குவிக்கப்பட உள்ளது.

இந்த வேலைத்திட்டங்கள் நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியை இலக்காகவும் நோக்காகவும் கொண்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் என்பது புதிய முதலீடுகளும் அந்நியச் செலாவணியும் வந்து சேர வழிவகை செய்யும் முக்கிய மார்க்கமாகும். அதேநேரம் புதிய தொழில்வாய்ப்புகள் உருவாகவும் புதிய முதலீடுகளுக்கும் இவ்வலயங்கள் வழிவகை செய்யும். அத்தோடு பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் இத்திட்டங்கள் பக்கபலமாக அமையும்.

துரித பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு அமைக்கப்படவிருக்கும் இப்பொருளாதார ஊக்குவிப்பு வலயங்கள் நாட்டின் மறுமலர்ச்சிக்கு நிச்சயம் பக்கபலமாக இருக்கும். மேலும் இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை அமைக்கும் திட்டங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பிரதேசங்களும் உள்வாங்கப்பட்டிருப்பது விஷேடமானதாகும். இது அவ்வப் பிரதேசங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவே இருக்கும்.

இம்மாகாணங்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை குறைத்து கட்டுப்படுத்துவதற்கு இவ்வலயங்கள் பெரிதும் உதவக் கூடியதாக இருக்கும். அத்தோடு இக்கைத்தொழில் வலயங்கள் அமைவுறும் பிரதேசங்களில் சமூக, பொருளாதார மறுமலர்ச்சியும் நிச்சயம் ஏற்படும்.

ஆகவே இந்த முதலீட்டு கைத்தொழில் வலயங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு மாத்திரமல்லாமல் நாட்டின் சுபீட்சத்துக்கும் நிச்சயம் பங்களிக்கும்.


Add new comment

Or log in with...