உணவுப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் மானியத் திட்டம்

நாட்டில் நெற்செய்கை உள்ளிட்ட விவசாயத்துறையை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் பல்வேறு வேலலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நெற்செய்கை உள்ளிட்ட பெருந்தோட்ட மற்றும் உணவுப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான சீதோஷண நிலையையும் மண்வளத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தும் கூட கடந்த வருடம் நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. இந்நெருக்கடியின் விளைவாக உணவு நெருக்கடிக்கும் உள்ளாகக்கூடிய அச்சுறுத்தலை நாடு எதிர்கொண்டது. இது பல மட்டங்களதும் அவதானத்தைப் பெற்ற விடயமாகியது. யுனிசெப், உணவு விவசாய அமைப்பு உள்ளிட்ட ஐ.நா. நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அந்த சூழலில் வலியுறுத்தி இருந்தன.

அந்தளவுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் கோஷாக்கு விடயம் முக்கியத்துவம் பெறுவதற்கு இரசாயனப் பசளை பாவனை தடை செய்யப்பட்டமை முக்கிய காரணமாக அமைந்தது. இரசாயனப் பசளை பயன்பாடு மாத்திரமல்லாமல் அதன் இறக்குமதியும் இடைநிறுத்தப்பட்டதோடு இயற்கை பசளையைப் பயன்படுத்துமாறு விவசாயிகள் வலியுறுத்தப்பட்டனர்.

ஆனால் விவசாயிகள் இரசாயனப் பசளை பாவனை தடைத் திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு இரசாயனப் பசளையையே வழங்குமாறும் கோரினர். இயற்கைப் பசளைப் பயன்பாட்டின் ஊடாக உரிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு செயற்கைப் பசளைப் பசளையை விவசாயிகள் கோரிய போதிலும், அக்கோரிக்கை கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதன் காரணத்தினால் நெற்செய்கை உள்ளிட்ட உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதை விவசாயிகள் தவிர்த்துக் கொண்டனர்.

இதன் விளைவாக உணவு நெருக்கடி தோற்றம் பெறக்கூடிய அச்சுறுத்தல் உருவானது. இந்தப் பின்புலத்தில்தான் ஐ.நா நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் நிலைமை உருவானது.

இவ்வாறான சூழலில் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவதில் விஷேட கவனம் செலுத்தினார். இதன் நிமித்தம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கத் தேவையான வழிகாட்டல்களை வழங்கினார்.

குறிப்பாக நெற்செய்கை உள்ளிட்ட அனைத்து பயிர்ச்செய்கைக்கும் இரசாயனப் பசளைப் பயன்பாட்டுக்கு இடமளிக்கப்பட்டது. அத்தோடு இரசாயனப் பசளையை இறக்குமதி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் விளைவாக விவசாயிகள் பயிர்ச்செய்கையில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினர். இந்த சூழலில் உணவு உற்பத்தி பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவென பல்வேறு மானிய மற்றும் நிவாரணத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக விவசாயிகள் பசளை கொள்வனவு செய்து கொள்ளவென அவர்களது வங்கிக் கணக்குக்கு கடந்த போகத்தின் போது பணம் வைப்பிலிடப்பட்டது. அவர்களது அறுவடையை உச்சமட்ட உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு உணவு உற்பத்தி பயிர்ச் செய்கைத்துறையின் பக்கம் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு விவசாயத் துறையை மேம்படுத்தவென பலவிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழலில் விவசாயிகள் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடக்கூடிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்நாட்டு உணவு உற்பத்தி பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் திட்டத்தின் மற்றொரு நடவடிக்கையாக இம்முறை சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் 6 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இரசாயனப் பசளை அல்லது காபனிக் உரம் கொள்வனவு செய்யவென மானிய வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேயருக்கு இருபது ஆயிரம் ரூபா வீதமும், இரண்டு ஹெக்டேயருக்கு 40 ஆயிரம் ரூபா வீதமும் விவசாயிகளுக்கு பசளைக்கென இந்த வவுச்சர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கென 10 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதேவேளை யூரியா பசளையின் விலையை எதிர்வரும் நாட்களில் மேலும் குறைப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கைகளின் பயனாக விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கையினால் ஏற்படக்கூடிய செலவீனங்கள் பெரிதும் குறைவடைவதற்கு வழிவகுத்துள்ளன.

நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் விவசாய மேம்பாட்டு நடவடிக்கைகளின் பயனாக நெற்செய்கை உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளில் விவசாயிகள் நம்பிக்கையுடன் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆகவே உள்நாட்டு உணவு உற்பத்தி துறை தன்னிறைவு அடைவதற்கான சாதகமான சூழல்நிலையைக் கொண்டுள்ளது. இச்சூழலில் முன்னெடுக்கப்படும் விவசாய மேம்பாட்டு நடவடிக்கைகளை உச்சளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது விவசாயிகளின் பொறுப்பாகும். அது நாட்டுக்கும் மக்களுக்கும் அளிக்கும் பாரிய பங்களிப்பாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.


Add new comment

Or log in with...