14 ஆவது தேசிய யுத்த வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று

ஜனாதிபதி தலைமையில் போர் வீரர் நினைவுத்தூபியில் நிகழ்வு

முப்பது வருடகால யுத்தத்தின் போது உயிரிழந்த பொலிஸ் மற்றும் முப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 14ஆவது யுத்த வீரர் நினைவேந்தல் தின நிகழ்வு, இன்று (19) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர தேசிய யுத்த வீரர் நினைவுத் தூபியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்

நடைபெறவுள்ளது. ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்த வீரர் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது ,

நாட்டின் யுத்த வீரர்களை நினைவு கூரும் இந்தவிழா பெருமைக்குரியதென, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளின் வீரர்களை நினைவுகூரும் வகையில், இங்கு விசேட போர்ப்பறை இசையும் மலர் அஞ்சலியும் இடம்பெறவுள்ளதாக கமல் குணரட்ண மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் இந்நினைவேந்தலில் பங்குபற்றவுள்ளனர். அனைத்து பௌத்த மற்றும் பிற மத சடங்குகளும் இங்கு நடத்தப்படவுள்ளன.

பின்னர் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும்.இங்கு முப்படை அணிவகுப்பு நடத்தப்பட்டு இராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள போர்வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் உரைகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...