களுத்துறை மாணவியின் மரணம்; பிரதான சந்தேகநபருக்கு மே 26 வரை விளக்கமறியல்

- வழக்கு விசாரணை CID யிடம் ஒப்படைப்பு
- ஹோட்டல் உரிமையாளரின் மனைவிக்கும் விளக்கமறியல்

களுத்துறை ஹோட்டல் ஒன்றில் மர்மமான மரணமான 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருக்கு எதிர்வரும் மே 26 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை கைது செய்யப்பட்ட 29 வயதான குறித்த நபர் நேற்று முன்தினம் (10) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க, களுத்துறை பிரதான நீதவான் திருமதி நீத்தா ஹேமமாலி ஹால்பான்தெனிய அனுமதி வழங்கினார்.

களுத்துறை தெற்கு, இசுரு உயனவில் வசிக்கும் தனுஷ்க கயான் சஹபந்து எனும் குறித்த சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் பொலிஸார் தடுத்து வைத்து விசாரித்த நிலையில் அவர் இன்றையதினம் (12) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் மே 26ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (06) களுத்துறை விடுதியின் மேல் மாடியில் இருந்து வீழ்ந்து மரணித்த சிறுமிக்கு கடைசியாக வந்த தொலைபேசி அழைப்பு தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரிடமிருந்து வந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதன்படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவருக்கும் குறித்த மாணவிக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமி தங்கியிருந்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவி நேற்று (11) கைது செய்யப்பட்டார்.

47 வயதான குறித்த பெண் நேற்றையதினம் (11) களுத்துறை பிரதான நீதவான் நீத்தா ஹேமமாலி ஹால்பன்தெனிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு மே 15ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை தொடர்பில் உரிய கவனம் செலுத்தாமல் சிறுமிக்கு விடுதியில் தங்க அனுமதித்தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

ஹோட்டலை நடத்தும் அவரது கணவரிடமும் வாக்குமூலம் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

குறித்த 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர், அவரது நண்பி மற்றும் அவரது நண்பியின் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டதோடு, தோழி மற்றும் அவரது காதலனை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் பிரதான சந்தேகநபருக்கு எதிர்வரும் மே 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான தங்கும் விடுதி உரிய தரத்தில் நிர்மாணிக்கப்பட்டதா என்பது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, பாடசாலை மாணவிகள் 16 பேரை துஷ்பிரயோகம் செய்து அவர்களை வீடியோ பதிவு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட களுத்துறை பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பு ஆசிரியர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...