ஆசிய அபிவிருத்தி வங்கி பொதுக் கூட்டத்திற்கு அமைச்சர் அலி சப்ரி தென்கொரியா பயணம்

- ஜனாதிபதியின் பிரதிநிதியாக இன்சியான் செல்கிறார்

எதிர்வரும் மே 02 - 05 வரை நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தென் கொரியாவின் இன்சியான் நகருக்குச் செல்லவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டுக்கு விஜயம் செய்யும் அமைச்சர் அலி சப்ரி மே 04ஆம் திகதி நடைபெறும் ஆளுநர்களின் அமர்வில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது, நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், முக்கிய உலகளாவிய வங்கிகள், நிறுவனங்கள், ஊடக நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 3,000 முதல் 4,000 பேர் வரையிலான பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் ஓர் உயர்மட்ட நிகழ்வாக அமையவுள்ளது.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தற்போதைய ஈடுபாடுகள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சர் இந்த நிகழ்வுகளுக்கு அப்பால் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விஜயத்தில் வெளிவிவகார அமைச்சருடன் வெளிவிவகாரப் பிரிவின் பணிப்பாளர் அஜித் அபேசேகரவும் கலந்துகொள்ளவுள்ளார்.


Add new comment

Or log in with...