- விமான நிலைய வரிச்சலுகை கடை கொள்வனவில் மேலதிக சலுகை
- மத்திய வங்கி Lanka Remit செயலியின் மூலம் மேலதிக நன்மைகள்
- தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் சுற்றறிக்கை
வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் வரிச்சலுகை நிவாரணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.
நேற்று (27) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றறிக்கை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமான நிலைய வரிச்சலுகை கடைத் தொகுதிகளில் இம்மேலதிக வரிச்சலுகையை பெறலாம் எனவும், வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது காணப்படும் வரிச்சலுகை நிவாரணமே செயற்படுத்தப்படுமெனவும் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 01, 2022 இற்குப் பின் நாட்டுக்கு அனுப்பிய வெளிநாட்டு நாணயத்தின் அடிப்படையில் குறித்த மேலதிக வரிச் சலுகை நிவாரணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கி முறையின் மூலம் இலங்கைக்கு சட்டபூர்வமாக பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஐந்து வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்ட வரிச்சலுகை நிவாரணம் பெற தகுதியுடையவர்கள் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
மே 01, 2022 முதல் வங்கி முறை மூலம் அனுப்பப்பட்ட பணத்தின் அளவின் அடிப்படையில், குறித்த வரிச்சலுகை நிவாரணம் தீர்மானிக்கப்படும்.
2,400 - 4,799 டொலர் அனுப்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மேலதிகமாக 600 டொலர் மேலதிக வரிச் சலுகை நிவாரணம் பெறுவார்கள், அதே நேரத்தில் டொலர் 4,800 - 7,199 டொலர் வரை அனுப்பிய தொழிலாளர்கள் 960 டொலர் மேலதிக வரிச் சலுகை நிவாரணம் பெறுவார்கள். 7,200 - 11,999 டொலர் வரை அனுப்பிய தொழிலாளர்கள் 1,440 டொலர் மேலதிக வரிச் சலுகை நிவாரணம் பெறுவார்கள். அதே நேரத்தில் 12,000 - 23,999 வரை அனுப்பியவர்கள் 2,400 டொலர் மேலதிக வரிச் சலுகை நிவாரணம் பெறுவார்கள். 24,000 டொலர் அல்லது அதற்கு மேல் அனுப்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4,800 டொலர் மேலதிக வரிச் சலுகை நிவாரணம் பெறுவார்கள்.
மத்திய வங்கியினால் செயற்படுத்தப்படும் Lanka Remit கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்கள், அவர்கள் நாட்டிற்கு அனுப்பியடொலர்களின் அடிப்படையில் மேலதிக வரிச்சலுகை நிவாரணதைப் பெற குறித்த செயலி மூலம் பதிவு செய்யலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Add new comment