நியூசிலாந்திடம் தோற்று உலகக் கிண்ண நேரடி தகுதியை இழந்தது இலங்கை அணி

தகுதிகாண் போட்டியில் ஆடும் நெருக்கடி   

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் 6 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 0–2 என இழந்ததோடு உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பையும் பறிகொடுத்தது.

ஹமில்டனில் நேற்று (31) நடைபெற்ற இந்தப் போட்டி இலங்கை அணிக்கு தீர்க்கமான ஆட்டமாக இருந்தது. இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும் நியூசிலாந்துக்கு எதிராக தொடர் தோல்வி ஒன்றை தவிர்ப்பதற்கும் இன்றைய போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டி இருந்தது.

இந்நிலையில் இலங்கை அணி துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தி தனஞ்சய டி சில்வாவை அணியில் இணைத்த நிலையிலேயே மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. எனினும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் ஒருமுறை சோபிக்கத் தவறினர்.

ஆரம்பம் தொடக்கம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 70 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க ஒருமுனையில் அரைச்சதம் பெற்றபோதும் மறுமுனை விக்கெட்டுகள் மளமளவென்று பறிபோயின.

நுவனிது பெர்னாண்டோ 2 ஓட்டங்களுக்கு வெளியேற குசல் மெண்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ் டக் அவுட் ஆகினர். பின்னர் வந்த சரித் அசலங்கவால் 9 ஓட்டங்களையே பெற முடிந்தது.

அணித்தலைவர் தசுன் ஷானக்க 36 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்றபோதும் அது இலங்கை அணியின் ஓட்டங்களை அதிகரிக்க போதுமாக அமையவில்லை.

இறுதியில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது அதிரடியாக பந்து வீசிய மட் ஹென்ரி, ஹென்ரி ஷிப்லி மற்றும் டரில் மிட்சல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளையும் 59 ஓட்டங்களுக்கு வீழ்த்த இலங்கை பந்துவீச்சாளர்களால் முடிந்தபோதும் வில் யங் மற்றும் ஹென்ரி நிகொல்ஸ் 5 ஆவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை பகிர்ந்து நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. யங் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களையும் நிகொல்ஸ் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தத் தோல்வியுடன் இலங்கை அணி உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறுவதற்காக சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் முதல் எட்டு இடங்களுக்குள் முன்னேற தவறியுள்ளது. இலங்கை அணி இந்தப் புள்ளிப் பட்டியலில் 81 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தை பிடித்திருப்பதால் அதனால் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற முடியாதுள்ளது.

சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கே உலகக் கிண்ணத்திற்கு நேரத் தகுதி பெற முடியும்.

இந்நிலையில் உலகக் கிண்ண தகுதியை பெறுவதற்கு இலங்கை அணி ஐ.சி.சி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆட வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி சிம்பாப்வேயில் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளது.

இந்தத் தகுதிகாண் போட்டி மூலம் இரண்டு அணிகளே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் என்ற நிலையில் இலங்கைக்கு பெரும் சவாலாக அமையவுள்ளது.

ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி அண்டை நாடான இந்தியாவில் வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...