- 3 இராணுவ உறுப்பினர்கள் மற்றும் தேரர் ஒருவர் சிக்கினர்
- ஏப்ரல் 10ஆம் திகதி வரை விளக்கமறியல்
புதையல் தோண்டும் நோக்கில் நிலத்தை சோதனை செய்து கொண்டிருந்த 3 இராணுவ உறுப்பினர்கள் மற்றும் ஒரு தேரர் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (31) வவுணதீவு முகாம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, கரடியனாறு, மாவடியோடை பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, சந்தேகநபர்களிடம் பழங்கால பொருட்களை கண்டறிவதற்காக பயன்படுத்திய நவீன சோதனையிடும் கருவி ஒன்றும், இராணுவத்திற்குரிய கெப் வாகனம் ஒன்றும், 4 கையடக்கத் தொலைபேசிகள் ஆகிய கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்களும் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், வெலிக்கந்தையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அவரின் கீழ் கடமையாற்றும் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் பௌத்த தேரர் ஒருவர் ஆகிய மொணராகலை, ஹொரணை, இரத்தினபுரி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் 29, 33, 45, 52 ஆகிய வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்றையதினம் (01) ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிர்வரம் ஏப்ரல் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment