நெருக்கமடையும் இந்திய - ஜப்பான் இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பு

இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர நட்புறவுகள் வலுவடைந்து வருகின்றன. இவ்விரு நாடுகளும் பல்வேறு விடயங்களில் ஓரணியின் கீழ் செயற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார விடயங்களில் இருநாடுகளும் நெருக்கமான நட்புறவைக் கொண்டு செயற்பட்டு வருகின்றன.

ஜப்பானியப் பிரதமர் புமியோ கிஷிடா சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். சர்வதேச சவால்களை எதிர்கொள்ளுதல், இந்தியா-_ ஜப்பான் இடையிலான சிறப்புத் திட்டங்கள், இருதரப்பு உறவுகள், இந்தோ- பசிபிக் தொடர்பான புதிய திட்டங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஜி-7 மாநாடு, இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஜி-20 மாநாடு குறித்து இரு தலைவர்களும் ஆராய்ந்தனர்.

இந்தியாவின் பொருளாதாரச் சந்தையில் ஜப்பான் முக்கிய பங்குதாரராக உள்ளது. ஜப்பான் பல்வேறு துறைகளில் பெருந்தொகை நிதியை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக மின்சார உற்பத்தி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை நிர்மாணிப்பதில் ஜப்பான் தாராளமாக இந்தியாவுக்கு நிதியுதவி செய்து வருகிறது. மும்பை - அஹமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு 80 சதவீத நிதியை ஜப்பான் வழங்குகிறது. இந்தத் திட்டத்துக்காக ஐம்பது ஆண்டு கால தவணையில் 0.1 சதவீத வட்டியில் ரூ.79,000 கோடி (இந்திய நாணயத்தில்) வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. கடனை மீளளிக்க 15 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கவும் ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது.

இதேவேளை டெல்லி, சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களிலும் ஜப்பான் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது. இப்போதைய புள்ளிவிபரத்தின்படி இந்தியாவில் 1,400- இற்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயற்படுகின்றன.

ஆசிய பசிபிக் அல்லது இந்திய பசிபிக் பிராந்தியம் எதிர்கொண்டுள்ள சவால்களைச் சமாளிக்க இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன.

இந்தியாவுக்கு ஆரம்பம் முதலே நெருக்கமான நாடாக ஜப்பான் உள்ளது. காலனித்துவத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு முதலில் உதவியது ஜப்பான் நாடு ஆகும். இந்தியாவுடன் ஜப்பான் 1952 இல் நல்லுறவைத் தொடங்கியதுடன் தொழில், முதலீடு என்றெல்லாம் பல்வேறு வகைகளில் தொடர்ந்து உதவி வருகிறது. இத்தகைய நல்லுறவு ஏற்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

இந்தியாவும் ஜப்பானும் காலம் காலமாக நல்லுறவுகளைப் பேணி வருகின்றன. நூற்றாண்டுகளாக இந்தியாவும் ஜப்பானும் கலாசார பரிமாற்றங்களைப் பகிர்ந்துள்ளன. குறிப்பாக பௌத்த மதத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் பல நூற்றாண்டுகாலத் தொடர்புகள் உள்ளன. அத்துடன் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் இராணுவமும், சுபாஸ் சந்திர போஷ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்திய இராணுவமும் கூட்டமைத்துக் கொண்டு பிரித்தானியப் படையை எதிர்த்தன.

இந்தியாவின் கட்டமைப்புப் பணிகளுக்கு அதிகம் நிதியுதவி செய்யும் நாடுகளில் ஜப்பான் முன்னிலையில் உள்ளது. டில்லி_ மும்பை இடையிலான தொழில்துறைக் கட்டமைப்புக்கும் ஜப்பான் உதவியிருந்தது.

(07ஆம் பக்கம் பார்க்க)


Add new comment

Or log in with...