60 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இரு பிள்ளைகளின் தந்தையான ஆசிரியர் பலி

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) முற்பகல், காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வரும் 39 வயதான பரணிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு சென்ற வேளையிலேயே இன்று மு.ப. 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளை - செங்கலடி வீதியின், பசறை 13ஆவது மைல்கல் பகுதியில் உள்ள  வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து  விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

பசறை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் பேருந்து விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...