4 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஸஹ்ரானின் மனைவி பிணையில் விடுதலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சுமார் 4 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான பிரதான சூத்திரதாரியென தெரிவிக்கப்படும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியான பாத்திமா ஹாதியா இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (15) குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவரது பிணை கோரிக்கையை ஏற்ற நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய, ரூ. 25,000 ரொக்கப் பிணையிலும், ரூ. 25 இலட்சம் கொண்ட இரு சரிரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) தலைமையகத்தில் முன்னிலையாகி கையொப்பமிடவேண்டும் எனும் நிபந்தனையையும் நீதவான் விதித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஏப்ரல் 21ஆம் திகதி பல்வேறு சொகுசு ஹோட்டல்கள் மற்றும் கிறிஸ்தவ, கத்தோலிக்க தேவாலயங்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, நூற்றுக் கணக்கான உயிர்கள் பலியாகின.

இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...