- கடந்த வார பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்ச்சையின் பின் முடிவு
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் சபாநாயகருக்கு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை (23) இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் அரசாங்கத்தின் நிதி பற்றிய குழுவின் தலைவராக மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டதோடு, கடந்த வாரம் அவரது தலைமையில் முதலாவது கூட்டமும் இடம்பெற்றிருந்தது.
குறித்த பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்ட நிலையில், ஆளும் கட்சியினால் அதே கட்சியைச் சேர்ந்த மயந்த திசாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டு ஆளும் கட்சியின் ஆதரவுடன் அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சியினால் வகிக்கப்பட வேண்டிய குறித்த பதவியை எதிர்க்கட்சியே பெயரிட வேண்டுமெனவும், அவ்வாறு பெயரிடப்பட்ட ஹர்ஷ டி சில்வாவை ஆளும் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லையெனவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார் என்பதோடு, கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment