மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளில் 3 கொலைகள்

- தனிப்பட்ட தகராறு; வீட்டுக்குள் புகுந்த குழு; வீட்டு வேலை செய்பவர் தாக்குதல் 

கிளிநொச்சி, மூதூர், யாழ்ப்பாணம் ஆகிய 3 வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 3 கொலைகள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (12) பிற்பகல் மற்றும் இரவு வேளையில் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மூதூரில்...
அதற்கமைய நேற்று பிற்பகல் மூதூர், புளியடிச்சோலை கங்குவேலி பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றியதில், ஒருவர் மற்றையவரை தாக்கியதில் காயமடைந்த 47 வயதான அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில்...
கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த சிலர், வீட்டில் இருந்த 3 பேரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில், படுகாயமடைந்த அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, அத்தாக்குதலை மேற்கொள்ள வந்தவர்களில் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில்...
யாழ்ப்பாணம், அத்தியடி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவர் பொல் ஒன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் பணிபுரிந்த நபர் மோட்டார் சைக்கிளில் வந்து, இக்கொலையை செய்துவிட்டு வீட்டின் வாயில் கதவிற்கு பூட்டொன்றை பூட்டிவிட்டு, பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...