- ஒக்டோபரில் விலை குறைக்கப்பட்ட போது குறைக்கப்படவில்லை
பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் ஒக்டேன் 92 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 30 இனால் ரூ. 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் கட்டணங்களை அதிகரிப்பதில்லை என தமது சங்கம் முடிவெடுத்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பெற்றோலின் விலை அதிகரிக்கும் போதோ அல்லது குறைக்கப்படும்போதோ அது முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர், விலை திருத்தம் காரணமாக பயணிகளும், முச்சக்கரவண்டி சாரதிகளும் கட்டணங்கள் தொடர்பில் குழப்பமடைவதாக சுட்டிக்காட்டினார்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் அதன் கட்டணங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், தாங்கள் தங்களது சேவைகளை வழங்கி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை தங்களிடம் நியாயமற்ற முறையில் கட்டணம் விதிக்க முற்பட்டால், பயணிகள் அக்கட்டணத்தை நிராகரிக்க முடியும் என்பதோடு, குறித்த முச்சக்கர வண்டியில் பயணிக்க மறுக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் ஒக்டேன் 92 விலை ரூ. 40 இனால் குறைக்கப்பட்டு ரூ. 410 இலிருந்து ரூ. 370 ஆக விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதற்கு முன்பு அதிகரிக்கப்பட்ட முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment