நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நெளபர் மௌலவி உள்ளிட்ட 25 பேரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிணை கோரிக்கை இன்றையதினம் (05) மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா, நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினமான 2021 ஏப்ரல் 21ஆம் திகதி கிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரி மொஹமட் முபாரக்கின் மனைவி ஆயிஷா சித்திகா மற்றும் மொஹமட் வசீம் பஸ்லுர் ரஹ்மான் ஆகியோருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை சட்ட மாஅதிபரிடம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதவானிடம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...