சஜித், மத்தும பண்டார மீது டயானா கமகே மனு தாக்கல்

ஜனவரி 25இல் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை மற்றும் பதவிகளை வகித்து வருவது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மனு தாக்கல் செய்துள்ளார். இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவரையும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா ஊடாக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்ததுடன், சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களாக நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஆதாரமாக டயானா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரிடமிருந்து சத்தியக் கடதாசியையும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை சவால் செய்ய ரஞ்சித் மத்தும பண்டார மேற்கொண்ட நீதித்துறை நடவடிக்கையையும் தனது மனுவில் ஆதாரமாக முன்வைத்துள்ளார்.

ஒரு கட்சி உறுப்பினர் மற்றொரு கட்சியின் உறுப்பினராக இருந்தால், அவர் அல்லது அவள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை இழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பின் அத்தியாயம் 3 இன் பிரிவு 3 (3) குறிப்பிடப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவருமே ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தை வைத்திருப்பதும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகிப்பதும் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பை வழங்குமாறு டயானா கமகே நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

மனுவை பரிசீலித்ததன் மூலம் மேற்படி பதவிகளில் இருப்பவர்களை இடைநிறுத்த உத்தரவிடுமாறும் டயானா கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.

 


Add new comment

Or log in with...