முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் டிசம்பர் 16ஆம் திகதி விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பின் மூலமான விடுதலை தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (24) உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்ப்பட்ட போதே நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியது.
இம்மனுக்கள், உயர் நீதிமன்ற நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதியின் விளக்கங்களை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கான அழைப்பாணையை விடுக்குமாறு அறிவிக்கப்பட்டது.
குறித்த மனுக்களை பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமண பிரேமச்சந்திர, அவரது மகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுஸைன் ஆகியோர் சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிட்டு திருத்தப்பட்ட மனுவை சமர்ப்பிக்க மனுதாரர்களின் சட்டத்தரணிகள் அனுமதி கோரியிருந்தனர்.
அதற்கமைய இக்கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், டிசம்பர் 16ஆம் திகதி அவரை நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு இன்று அழைப்பாணை விடுக்க உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை கடந்த மே 31ஆம் திகதி பிறப்பித்திருந்தது. அத்துடன், துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதற்கமைய, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வாவை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் (CID) கடந்த ஜூன் 01ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment