கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்று மீட்கப்பட்டவர் மரணம்

பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காணாமல் போயிருந்த அவர் நேற்றுமுன்தினம் (10) இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெலிகந்த, சிங்கபுர வனப்பகுதியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு (11) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இவ்வாறு தப்பிச் சென்ற குறித்த நபர் உணவின்றி கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் வாளி தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதோடு, இதன்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு பெறும் நபர்கள் பலர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் ஒரு சிலர் கைது செய்யப்பட்டதோடு, மற்றும் சிலர் சரணடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படும் 200 இற்கும் அதிகமானோருக்கு எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...