அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அனுமதியை ஒரே இடத்தில் விரைவாக வழங்க One Stop Unit

- 21 நாட்களில் அபிவிருத்தி நடவடிக்கை விண்ணப்பங்களுக்கு அனுமதி

அபிவிருத்தி நடவடிக்கைக்கான விண்ணப்பங்களுக்கான அனுமதியை துரிதமாக வழங்குவதற்கான துரித சேவைப் பிரிவான One Stop Unit (வன் ஸ்டொப் யுனிட்) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, அபிவிருத்தி விண்ணப்பங்களுக்கான அனுமதியை துரிதமாக வழங்குவதற்கான வன் ஸ்டொப் யுனிட்டை நிறுவும் நிகழ்வு நேற்று (10) பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த வன் ஸ்டொப் யுனிட் 26 நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு விரைவு சேவை பிரிவாக நிறுவப்பட்டுள்ளது மற்றும் அந்த நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு விடயதான குழுவும் (Scope Committee) நிறுவப்பட்டுள்ளது.

அதற்கமைய, அபிவிருத்தி அனுமதிப்பத்திரங்களுக்கு அவசியமான அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் 21 நாட்களுக்குள் ஒரே இடத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திச பிரதமர், அபிவிருத்தி நடவடிக்கைக்கான விண்ணப்பங்களுக்கான அனுமதியை துரிதமாக வழங்குவதற்கான துரித சேவைப் பிரிவான One Stop Unit (வன் ஸ்டொப் யுனிட்) அறிமுகப்படுத்தப்பட்டமை இலங்கையின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்றார்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நாட்டிற்கு முதலீட்டு வாய்ப்புகளை திறம்படக் கொண்டுவருவதற்கான பிரதான பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெனாண்டோ, தேனுக விதானகமகே, அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் (இரண்டு திட்டமிடல் வலயங்கள்) லலித் விஜேரத்ன, அமைச்சின் செயலாளர்கள், உள்ளூராட்சி தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Add new comment

Or log in with...