மனித சமூகத்திற்கான முன்மாதிரி

மனித வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மிகச்சிறந்த முன்மாதிரியாவார்கள். அன்னாரை உலகிற்கான இறுதித்தூதராக அனுப்பி வைத்ததற்கான நோக்கத்தை அல்லாஹ்தஆலா இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றான்.

'நபியே! அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே அன்றி நாம் உம்மை அனுப்பவில்லை'.

(அல்குர்ஆன் 21:107)

அதேநேரம் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபிகளாருடன் சம்பந்தப்பட்ட சம்பவமொன்றை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! இறைநிராகரிப்பாளர்களுக்கு எதிராகப் பிரார்த்தியுங்கள்' என்று ஒரு தடவை கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. மாறாக நான் அருளாகவே அனுப்பப்பட்டுள்ளேன்' எனக் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜூவைப் இப்னு முத்இம் (ரழி) அவர்கள், 'நான் கோபத்தில் யாரையேனும் ஏசியிருந்தாலோ, சபித்திருந்தாலோ நானும் ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் ஒருவன்தான். நீங்கள் கோபம் கொள்வதைப் போன்றுதான் நானும் கோபம் கொள்கிறேன். இருப்பினும், என்னை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருளாகவே அனுப்பியுள்ளான். எனவே இறைவா! அவரை நான் ஏசியதை அல்லது சபித்ததை மறுமைநாளில் அவருக்கு அருளாக மாற்றிவிடுவாயாக' என்று குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அத்தபரானி)

நபிகளார் தம் சமூகத்தினருக்கு துன்பமும் இன்னல்களும் விளைவிக்கின்ற எதுவொன்றையும் தமக்கு பெரும் பாரமாகவும் வருத்தமாகவுமே கருதினார்கள்.

இது தொடர்பில் அல் குர்ஆன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றது. 'நிச்சயமாக உங்களில் இருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு வருத்தத்தை அளிக்கிறது. உங்கள் விடயத்தில் அவர் அதிக ஆர்வமுடையவராக இருக்கின்றார். இறை நம்பிக்கையாளர்களுடன் கருணையும் இரக்கமும் உடையவராவார்.

(அல் குர்ஆன் 9:128)

அதேநேரம் தவறுகள் புரிந்த தம் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் அல்குர்ஆன் கூறி வைக்கத் தவறவில்லை.

'நபியே! அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மைவிட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். (அல் குர்ஆன் 3:159)

இத்தகைய மகத்துவம் மிக்க நற்பண்புகள் நிறைந்த வாழ்வை வாழ்ந்து முன்மாதிரியாக வழிகாட்டியுள்ள முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொண்டு அருள்மிகு இஸ்லாத்தை அல்லாஹ் பூரணப்படுத்தி எமக்களித்துள்ளான். இது அல்லாஹ் மனிதர்களாகிய எம்மீது கொண்டுள்ள கருணையினதும் இரக்கத்தினதும் வெளிப்பாடாகும். எனவே, அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை தீனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் ரஸூலாகவும் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டேன்' (ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிக்கு அமைய நாமும் உறுதுணையாக நின்று, அகில உலகத்திற்கு அருட்கொடையாம் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வை உலகத்திற்கு எடுத்தியம்புவோம்.

ஏ.எம். முஹம்மத் ஸப்வான்,...

சீனன்கோட்டை, பேருவளை.


Add new comment

Or log in with...