பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கும் கோரிக்கை; ஜீவன் தொண்டமானும் கையெழுத்து

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தை (Prevention of Terrorism Act - PTA) நீக்குமாறு வலியுறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் இன்று (26) நுவரெலியா, ரிகில்கஸ்கட நகரில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே ஜீவன் தொண்டமான் குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள ஜீவன்,

 

 

நுவரெலியாவில் நடைபெற்ற கையெழுத்து பெறும் பிரச்சாரத்தில் இரா. சாணக்கியன் எம்.பியின் அழைப்பின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க நானும் கலந்துகொண்டேன். இந்தச் சட்டத்தால் மலையக சமூகம் கூட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால் இந்த மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தேன்.

நமது தேசத்தின் பாதுகாப்பு முக்கியமானது என்றாலும், PTA காலாவதியானது என்பதுடன், அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை தாண்டியதாக அது உள்ளது. நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்கான முதல் படி பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதாகும். சாதகமான சீர்திருத்தங்கள் தற்போ இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதால், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய அவசியமமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுப்பார் என நம்புகிறோம்.


Add new comment

Or log in with...