வேறு திட்டங்களுக்கு ஒதுக்கிய 100 மில். டொலர்கள் மருந்து இறக்குமதிக்கு

- ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியம் உடன்பாடு

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ  உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக, வெவ்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டம் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் நிலச்சரிவு அனர்த்தங்களை குறைக்கின்ற கருத்திட்டம் போன்ற கருத்திட்டங்களின் விடயதானங்களைத் திருத்தம் செய்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் துரிதமாக வழங்குவதற்கு அவ்வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கான நிதியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அனர்த்தங்களை குறைத்தல் தொடர்பான கருத்திட்டத்திற்கான 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஆகிய 100 மில்லியன் டொலர்களை அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ  உபகரணங்களைக் கொள்வனவுக்குப் பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...