பிரேமலால் ஜயசேகர இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

- இதுவரை 19 அமைச்சர்கள், 38 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) முற்பகல் இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே 37 இராஜாங்க அமைச்சர்கள் கடந்த வாரம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது மொத்தமாக 38 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது தவிர 19 அமைச்சரவை அமைச்சர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேளையில், வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் கூட்ட ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்த வேளையில், ஐ.தே.க. ஆதரவாளர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, மரண தண்டணை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் கடந்த மார்ச் 31ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...