காஷ்மீர் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு 'விஷன் இந்தியா'வுடன் உடன்படிக்கை

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஜம்மு காஷ்மீர்  நிர்வாகம் 'விஷன் இந்தியா' வேலைத்திட்டத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சார்த்திட்டுள்ளது.

காஷ்மீர் நிர்வாகத்தின் மிஷன் யூத் திட்டம் விஷன் இந்தியா வேலைத்திட்டத்துடன்  இணைந்து யூனியன் பிரதேச இளைஞர் யுவதிகளை கைத்தொழில் துறையுடன் இணைக்க உதவும் வகையில் பிரத்தியேக இணைய தள வசதியையும் ஏற்படுத்தியுள்ளன. இத்திட்டத்தின் ஊடாக இவ்வருட முடிவுக்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்தோடு ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் சிறந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் அவர்களுக்கென பிரத்தியேக இணைய தள வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது.

மேலும் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு போக்குவரத்து துறையின் ஊடாக நிலைபேறான வாழ்வாதாரத்தை  ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மானிய விலையில் சிறியளவிலான வணிக வாகனங்களை கொள்வனவு செய்து கொள்ளவும் காஷ்மீர் நிர்வாகத்தினால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இத்திட்டத்தின் கீழ் மிஷன் யூத் வேலைத்திட்டத்தின் மூலம் 80 ஆயிரம் ரூபா அல்லது வாகனத்தின் பெறுமதியில் 10 வீதத்தையும் அதற்கு இணையான தொகையையும் வாகன உற்பத்தியாளர்கள் ஊடாக வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மிஷன் யூத் திட்டமானது கல்வி, வர்த்தகம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளுடனும் ஒருங்கிணைந்து இளைஞர்களுக்கென பல  வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

‘மிஷன் யூத்’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.  ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களுக்கு வளங்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...