உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பந்துல அமைச்சின் செயலாளருக்கு பணிப்பு
பஸ் கட்டணக் குறைப்புக்கு எதிராக தனியார் பஸ் உரிமையாளர்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
பஸ் கட்டணங்களை திருத்தியது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சபையின் அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்குமிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளையும் தொலைபேசியூடாக கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளனர்.அத்துடன் அவர்களை படுகொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகத்தால் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணையொன்றை நடத்தி ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு கடமையை செய்வதற்கு தடையை ஏற்படுத்திய தனியார் பஸ் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிறிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Add new comment