இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தது. இதில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பத்தாவது நாள் போட்டிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் பதக்க வாய்ப்புகளை தவறவிட்டனர்.
இதில் பெண்களுக்கான நீளம் பாய்தல் இறுதிப்போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை சாரங்கி சில்வா, 13ஆவது இடத்தை பிடித்து போட்டியை நிறைவுசெய்தார்.
தகுதிச்சுற்று போட்டியில் இவர் 06.42 மீற்றர் தூரம் பாய்ந்திருந்த போதும், இறுதிப்போட்டியில் 06.17 மீற்றர் தூரம் பாய்ந்திருந்த நிலையில், 13ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.
இந்தப்போட்டியில் பொதுநலவாய போட்டி சாதனையை பதிவுசெய்த நைஜீரிய வீராங்கனை ஈசா புரூம் 07.00 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கம் வென்றதுடன், அவுஸ்திரேலிய வீராங்கனை புரூக் புஸ்சுக்கேல் 06.95 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், கானாவின் டெபோராஹ் அகுவா 06.94 மீற்றர் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
அதேபோன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற சுமேத ரணசிங்க இறுதிப்போட்டியில் 10ஆவது இடத்துடன் தொடரை நிறைவுசெய்துகொண்டார். இவருக்கு கிடைத்த மூன்று வாய்ப்புகளில் அதிகமாக 70.77 மீற்றர் வீசினார்.
இந்தப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷாட் நதீம் பொதுநலவாய போட்டி சாதனை மற்றும் தன்னுடைய தனிநபர் சிறந்த பிரதியினை பதிவுசெய்து 90.18 மீற்றர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை வென்றதுடன், கிரேனேடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ் வெள்ளிப்பதக்கத்தையும் (88.64), கென்யாவின் ஜூலியஸ் எகோ வெண்கலப்பதக்கத்தையும் (85.70) வென்றனர்.
Add new comment