எதிர்வரும் வாரம் பாடசாலைகள் திங்கள், செவ்வாய், புதன் இடம்பெறும்

- 2 நிபந்தனைகளை அறிவித்துள்ள கல்வி அமைச்சு

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும், எதிர்வரும் வாரம் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் பாடசாலைகளை நடாத்துமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

போக்குவரத்து, எரிபொருள் உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக இதுவரை திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலைகள் நடாத்தப்பட்டு வந்த நிலையில், எதிர்வரும் வியாழன் (11) விடுமுறை தினம் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சசு அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (08) பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக இன்று (05) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன், ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக, கடந்த ஜூலை 19ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைக்கு அமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, மறு அறிவித்தல் வரை, வாரத்தின் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடாத்த வேண்டுமாக இருக்கின்ற நிலையில், எதிர்வரும் வியாழன் (11) பொது விடுமுறை என்பதால், பாடசாலைகள் பின்வரும் வகையில் இடம்பெறவுள்ளன.

  1. அவ்வாரத்தின் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் பாடசாலைகளை நடாத்துவதோடு, வெள்ளிக்கிழமை தினம் மாணவர்களுக்கு வீட்டு அடிப்படையிலான செயற்பாடுகளை வழங்குதல் அல்லது ஒன்லைன் முறையில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  2. போக்குவரத்துச் சிரமங்கள் இல்லாத பாடசாலைகளில் அப்பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்மதத்துடனும் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடனும் வெள்ளிக்கிழமை பாடசாலையை நடாத்தவும், ஒவ்வொரு ஆசிரியரும் வாரத்தில் குறைந்தபட்சம் 3 நாட்களாவது பாடசாலைக்கு வந்து கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நெகிழ்வான அட்டவணை தயாரித்தல்.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...