ஜனாதிபதி செயலகத்துக்குள் முதலில் பிரவேசித்ததாக கூறப்படும் நபருக்கு விளக்கமறியல்

- கத்தியை காண்பித்து மிரட்டியதாக பொலிஸார் தெரிவிப்பு

ஜனாதிபதி செயலகத்துக்குள் முதலில் பிரவேசித்ததாக கூறப்படும் ஆர்ப்பாட்டகாரரை எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலிண கமகே உத்தரவிட்டுள்ளார்.

நேற்றையதினம் (01) பன்னிப்பிட்டி, பழைய வீதி பிரதேசத்தில் வைத்து, கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 38 வயதான சந்தேகநபரை பொலிஸார் இன்றையதினம் (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 09 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, போராட்டக்காரர்களில் சிலர் ஜனாதிபதி செயலகத்தின் வேலியை உடைத்துக் கொண்டு, ஜனாதிபதி செயலத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில், கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய, அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களில் ஜனாதிபதி செயலகத்திற்குள் முதலில் நுழைந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் குறித்த தினத்தில் கையில் கத்தியை வைத்துக் கொண்டு, அருகில் வந்தால் வெட்டுவேன் என, கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மிரட்டியதாகவும், இல்லையெனில் தனது கழுத்தை வெட்டிக் கொள்வேன் என அவர்கள் முன் தெரிவித்ததாகவும், இதுவரை இடம்பெற்ற விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சட்டவிரோதமாக இவ்வாறு பிரவேசித்ததன் மூலம் ஏனையவர்களும் ஜனாதிபதி செயலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அன்றைய தினம் கடமையில் ஈடுபட்ட அதிகாரிகள் முன்னிலையில் சந்தேகநபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

முன்வைக்கப்பட்ட அறிக்கைகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை முகமூடியுடன் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

 


Add new comment

Or log in with...