இன்று (22) அதிகாலை காலி முகத்திடலில் வைத்து கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதவான் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
போராட்டக்காரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் பலர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவம் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் மூலம், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகம் மற்றும் அதன் பிரதான நுழைவாயிலுக்கான தடைகளை நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும், இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக 9 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்திருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் நிஹால் தல்தூவ குறிப்பிட்டிருந்தார்.
இன்று (22) அதிகாலை 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தின் பிரதான பகுதியான ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலான 'கேற் சீரோ' (Gate Zero) பகுதி விடுவிக்கப்பட்டு, அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது மேலும் பலர் காயமடைந்திருந்தனர் என்பதோடு, குறித்த தாக்குதலை இலங்கையிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் கண்டித்திருந்ததோடு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கண்டித்திருந்தது.
அது மாத்திரமன்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இச்சம்பவத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்குள்ளாகியுள்ள போராட்டக்காரர்கள்.#lka #SriLanka pic.twitter.com/eqsH3M1CMx
— Maatram (@MaatramSL) July 22, 2022
Add new comment