அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 20 வரை விடுமுறை

கல்வி அமைச்சு நேற்று அறிவிப்பு

அரசாங்க மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகள் அனைத்துக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு நேற்று தெரிவித்தது.

ஏற்கனவே எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்ததுடன் அந்த விடுமுறையைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள போக்குவரத்து தொடர்பான அசௌகரியங்களை கவனத்திற் கொண்டே கல்வியமைச்சு மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சில் நேற்று அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்துக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கமையவே எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...