இன்று (08) இரவு 9.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரை, மேல் மாகாணத்தில் நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிஸ்ஸை, கொழும்பு வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு தெரிவித்தும் நாளையதினம் (09) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள குறித்த அறிவித்தலுக்கமைய, குறித்த பொலிஸ் பிரிவுகளில் உள்ளவர்கள் தமது வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும், பொலிஸ் ஊரடங்கை மீறுவது, பொதுமக்கள் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்வதை தடுப்பதாக அமையுமென கருதி, இறுக்கமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் ஊடாக பயணிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்று வழியை பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment