- கிளிநொச்சியில் நேற்று கைச்சாத்து நிகழ்வு
வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஜப்பான் அரசு சுமார் 244 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது.
ஜப்பான் அரசின் இந்நன்கொடை மூலம் டாஸ் கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையின் வட பிராந்தியத்தில் மனித நேய கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் தனது Grant Assistance for Grassroots Human Security Projects (GGP) திட்டத்தினூடாக 681,812 அமெரிக்க டொலர்கள் (சுமார் 244 மில்லியன் ரூபாய்) நன்கொடையை DASH அமைப்புக்கு வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை வழங்கலுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (28) காலை கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் அமைந்துள்ள DASH செயற்பாட்டு பகுதியில் இடம்பெற்றது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் DASH இன் நிகழ்ச்சி முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டு கைச்சாத்திட்டனர்.
2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் DASH இனால் 15 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டிருந்தது. இதில் ஜப்பானிய அரசின் GGP உதவித் திட்டத்தினூடாக 6.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டது.
“DASH க்கு ஜப்பான் வழங்கும் இந்த உதவியானது, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் ஜப்பான் அரசின் இவ்வுதவியானது 135 கண்ணி வெடி அகற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துள்ளது அதற்கான ஜப்பான் அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி கூறுவதாக DASH இன் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி தெரிவித்தார்.
இவ்வருடத்துடன், ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் அபிவிருத்தி தொடர்பில் இலங்கைக்கான ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவித் திட்டத்தில் முக்கிய அங்கம் பெறுகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் “கண்ணிவெடி பாதிப்பற்ற இலங்கை” என்பதை எய்துவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
Add new comment