மே 09 தாக்குதல்கள், கலவரம்; இதுவரை 1,500 பேர் கைது

- 677 பேருக்கு விளக்கமறியல்
- 847 முறைப்பாடுகள்

மே 09 ஆம் திகதி, அலரி மாளிகைக்கு அருகிலான 'மைனா கோ கம' மற்றும் காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்தான கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் இதுவரை 677 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவங்கள் தொடர்பில் நேற்றையதினம் (21) புதிதாக 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித் அவர், இதுவரை இச்சம்பவங்கள் தொடர்பில் மொத்தமாக நாடு முழுவதும் 847 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நேற்றையதினம் (21) இச்சம்பவங்கள் தொடர்பில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் பொலிஸ் பிணை மற்றும் நீதிமன்ற பிணைகளில் 101 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 39 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

அதற்கமைய இச்சம்பவங்கள் தொடர்பில்  இதுவரை 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் 677 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்தூவ மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகளை, நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பிரிவுகள் ஆகியன இணைந்து தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...