பிரதமர் ரணில் தலைமையிலான அரசின் பங்காளிகளாகமாட்டோம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்காதிருக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானத்துள்ளது.

இது தொடர்பில் இன்று (13) அக்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

தங்களது கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து மேற்கொண்ட கலந்துரையாடலில் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதற்கமைய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்க ஒருபோதும் தயாரில்லை எனவும்,

இதற்கு காரணம், சுமார் 3 மாதங்களாக தாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சர்வ கட்சி அரசாங்கமொன்றையே கோரியதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்,

இதேவேளை, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ள 10 கட்சிகள் குழுவானது எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நியமனமானது ஜனநாயகத்திற்கு முரணான செயலாக இருந்த போதிலும், இலங்கை முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள தங்களால் இயலுமான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆயினும் இந்த அரசாங்கத்தில் எந்தவொரு பதவிகளிலும் தாங்கள் வகிக்கப் போவதில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP), தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (TNA), மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகியன அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிப்பதில்லையென முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...