ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சகலருக்கும் நிச்சயம் நீதி கிடைக்கும்

 அதற்கான துரித முயற்சிகளில் அரசாங்கம் மும்முர நடவடிக்கை

பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை அமுல்படுத்த சட்ட மாஅதிபரிடம் அரசு ஆலோசனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு கடிதம் மூலம் சட்ட மாஅதிபரை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 196 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் 19 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை  அவர்களில் 81 பேரிடம் விசாரணைகள் நிறைவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதெனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் நௌபர் மௌலவி என்றும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிரணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உயித்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. இது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை சபையில் முன்வைக்கிறேன். அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 196 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 19 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 81 பேரிடம் விசாரணைகள் நிறைவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 453 ஆகும். கம்பஹா, கண்டி, குருணாகல், புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு கொழும்பு மற்றும் கேகாலை மேல் நீதிமன்றங்களில் 25,753 குற்றச்சாட்டுகளின் கீழ் 79 பேருக்கு எதிராக 27 வழக்குகள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புலனாய்வு சேவை, அவுஸ்திரேலிய அரச புலனாய்வு சேவை மற்றும் மாலைதீவு அரச புலனாய்வு சேவை ஆகியவை விசாரணை மற்றும் வழக்கு தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்கின. மேலும், தற்கொலைதாரிகள் மற்றும் அமைப்புகளின் ரூ.3,650 இலட்சம் மதிப்புள்ள காணிகள், கட்டிடங்கள், வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டன.அத்தோடு 1,680 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் நௌபர் மௌலவி. இவர் தீவிரவாத விரிவுரைகளை வழங்கியவர், தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர். மேலும், மூன்று இலங்கையர்களுக்கு எதிராக அமெரிக்க பெடரல் நீதிமன்றம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவர்கள் முகமது நௌபர், முகமது ரிஸ்கான் மற்றும் முகமது அஹ்மான் மில்லா ஆகியோர்களாகவர்.

விசாரணையில் சாரா ஜெஸ்மினை பார்க்கவில்லையென்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.சாரா ஜெஸ்மின் தப்பியோடுவதை பார்த்ததாக கூறிய சாட்சி நாட்டிலிருந்து மறைந்துள்ளார். அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

நிலந்த ஜயவர்தன ஏன் அரச சாட்சியாக மாறினார் என்பது குறித்து அனைவருக்கும் பிரச்சினையாக உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கான சதி என பலர் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இத் தாக்குதல் 2019 இல் நடந்தது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றியது. அந்த சமயத்தில் எப்படி சதி செய்ய முடியும். கடந்த ஆட்சியில் எமக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு வந்த நிலையில் அவற்றை சமாளிக்க வேண்டியிருந்தது, ஆனால் நாம் சதி செய்யவில்லை.

அப்போதைய சட்ட மாஅதிபர் தப்புல லிவேரா தான் அரசாங்க சாட்சியாக நிலந்த ஜயவர்தனவை நியமித்தார். இத்தாக்குதல் ஒரு சதி என்று ஓய்வு பெறவுள்ள சட்ட மாஅதிபர் தப்புல லிவேரா தெரிவித்தார். ஒருவேளை அவரது பதவிக்காலத்தை நீடிக்காததால் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம்.

இத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்காக பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிப்பதற்காக கடிதம் ஒன்றைத் தயாரித்துள்ளேன். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு எனது கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

ஏனென்றால், நீதிமன்றங்களுக்கு எமக்கு அழுத்தம் வழங்க முடியாது. இந்த நடவடிக்கைகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினூடாக நடைபெற வேண்டும். இத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நானும் எங்கள் அரசும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். (பா)

 லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...