இடைக்கால அரசு: 41 எம்.பிக்களும் இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றனர்

- அனைத்து கட்சிகளையும் பிரநிதித்துவப்படுத்தியே இடைக்கால அரசு
- 20 ஐ நீக்கி திருத்தங்களுடன் 19 கொண்டுவரப்படும்

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள  41 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று (10) மாலை 7.00 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளனர்.

இடைக்கால அரசை ஸ்தாபிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட அவர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதகா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்றையதினம் (10) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

நாம் 11 கட்சிகள், மொட்டு கட்சியிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள அநுர பிரியதர்ஷன யாபா, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட எம்.பி.க்கள் 41 பேரும் இன்று மாலை 7.00 மணிக்கு சந்திக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது நாம், இடைக்கால அரசாங்கத்தை நிறுவது தொடர்பில் முன்வைத்த யோசனைகள் தொடர்பிலும், அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளோம்.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

இடைக்கால ஆட்சியை யாராவது எடுத்து செய்யுமாறே நாம் கேட்கின்றோம். இந்த இடைக்கால ஆட்சியில் நாம் பதவிகளை எதிர்பார்க்கவில்லை. எமக்கு பதவிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. என்றார்.

நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவிக்கையில், இடைக்கால அரசாங்கம் வந்தவுடன் 20ஆவது திருத்தத்தை நீக்கி, 19ஆவது திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அதற்கு 2/3 பெரும்பான்மை அவசியம். எனவே முதலில் அதற்கு இடைக்கால அரசை உருவாக்க வேண்டும். என்றார்.

இதன்போது கருத்தே தெரிவித்த ஶ்ரீ.ல.சு.க.வின் செயலாளர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர,

நாம் இவை அனைத்தையும் செய்வதற்கு முன்னர், இடைக்கால அரசாங்கத்தை கொண்டு வர வேண்டும். அதன் பின்னர் 19வது திருத்தத்தை மீண்டும் திருத்தங்களுடன் கொண்டு வர வேண்டும். அதை நடைமுறைப்படுத்த 2/3 பெரும்பான்மை வேண்டும். அரசாங்கத்திடம் தற்போது 117 எம்.பிக்கள் இல்லை. இந்த செயற்பாட்டிற்கு உத்வேகம் தருவதற்காக, பொது ஜன பெரமுன கட்சியின் பெருமளவான எம்.பிக்கள் எம்முடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகிறார்கள்.

இந்த இடைக்கால அரசை நடாத்திச் செல்லும்போது, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து, அனைத்து தீர்மானங்களையும் எடுக்க வேண்டுமென்றே நாம் யோசனை முன்வைத்துள்ளோம். எனவே இப்பொறுப்பிலிருந்து யாராலும் விலக முடியாது.

அதற்கமைய, தற்போது போராட்டங்களை முன்னெடுப்பவர்கள், அதற்கு எதிராக பேசுபவர்கள், அரசாங்கம், எதிர்க்கட்சி, தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த இடைக்கால நிர்வாகத்திற்குள் உள்வாங்கப்படுவர். இதன்போது நாம் நிச்சயமாக ஒன்றுபட்ட முடிவே எடுப்போம்.


Add new comment

Or log in with...