அக்கரபத்தனை மற்றும் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று ஆலயங்கள் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டது.
குறித்த சந்தேகநபர் மோனிங்டன் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த போது பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து அவரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவரிடமிருந்து களவாடப்பட்ட தங்க நகைகள், அம்மன் பொட்டு, தொலைபேசி, 50 இற்கும் மேற்பட்ட நகை அடகு வைக்கப்பட்ட சிட்டைகள், ஒரு தொகைப் பணம் ஆகியன பொதுமக்களால் கைப்பற்றப்பட்டு, அவை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் ஆரம்ப கட்ட விசாணையின் பின் சந்தேகநபரை இன்று (17) நுவரெலியா நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;
அக்கரபத்தனை மற்றும் டயகம பகுதியில் மூன்று இந்து ஆலயங்கள் நேற்றையதினம் (16) உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து நேற்று பகல் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த சந்தேகநபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
அக்கரப்பத்தனை மற்றும் டயகம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு அங்கு உண்டியல் பணம் அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை கிளாஸ்கோ கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள வல்லடியான் ஆலயக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த தங்க ஆபரணங்கள் உண்டியல் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதனால் குறித்த தோட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
அத்தோடு கிளாஸ்கோ நெதஸ்டல் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல் களவாடப்பட்டுள்ளதோடு, அம்மனின் கழுத்தில் இருந்த பொட்டு உள்ளிட்ட தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன
இதேவேளை டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மோனிங்டன் கீழ்ப்பிரிவு தோட்ட முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்க நகைகளும் களவாடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பிரதேசத்தில் இன்றையதினம் அமைதியற்ற நிலை காணப்பட்டது. அத்தோடு இந்த ஆலய நிர்வாக சபையினர் டயகம மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடும் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ஹட்டன் விசேட நிருபர் - மலைவாஞ்ஞன்)
Add new comment