அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் எதுவுமே கிடையாது!

  • பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் நேர்காணல்
  • ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள் அரசை விட்டு வெளியேற முடியும்
  • ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நாம் ஏற்கனவே வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுள்ளோம் என்பது வெளிப்படை!
  • ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும், தற்போதைய அரசாங்கம் அல்ல. ஒரு குற்றத்தை ஊடகங்கள் அம்பலப்படுத்தினால் குற்றவாளிகள் மறைந்து விடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

உலகில் இரக்கமற்றn பயங்கரவாத அமைப்பை முழுமையாகத்

தோற்கடித்த ஒரே நாடு இலங்கை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) சரத் வீரசேகர தெரிவித்தார். லேக்ஹவுஸ் நிறுவன ஊடகங்களுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். "இன்று எனக்கு பயங்கரவாதியாகவுள்ள ஒருவர், நாளை உங்களுக்கு பயங்கரவாதியாக மாறலாம்" என்பதை மற்ற நாடுகள் புரிந்து கொள்வது

அவசியம்" எனவும் அமைச்சர் சரத் வீரசேகர இப்பேட்டியில் தெரிவித்தார்.

"பயங்கரவாதம் என்பது உள்ளூர் மற்றும் பிராந்தியத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அது நாடு கடந்தது, மற்றும் உலகளாவியது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் தரப்பிலிருந்து ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஐக்கிய இராச்சியம் தலைமையிலான ஐரோப்பிய நாடுகள் எங்களை சங்கடப்படுத்துவது நியாயமற்ற விடயமாகும். மூன்று இலட்சம் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக வைத்திருக்கும் போது இந்த மனித உரிமை அமைப்புகள் மற்றும் உபகுழுக்களில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகள் எங்கே இருந்தன? மூவாயிரம் சிறுவர்களை போராட்டத்துக்கு புலிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போது இவ்வமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்தனவா?" என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

கே: ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட முட்டை வீச்சுத் தாக்குதல் அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட தாக்குதல் என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நீங்கள் இதுபற்றி தெரிவிக்க விரும்புவது என்ன?

பதில்: இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர். இத்தகைய தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான சம்பவம் ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாது. அனைவரும் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துதல் வேண்டும். எங்களுக்குள் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் எனினும் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டேன். குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு நான் ஏற்கனவே பொலிஸ் மாஅதிபருக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். குறித்த சந்தேகநபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை தூண்டியது யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தை ஒரு கால்துடைப்பானால் மூடிவிட்டு கடந்துசெல்ல முடியாது.

கே: 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச சமூகத்தின் பக்கம் திரும்புவதனைத் தவிர வேறு வழியில்லை என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: கர்தினாலுக்கு உரிய மரியாதையினை நான் வழங்குகின்றேன், பொலிசாரைப் பொறுத்தவரையில் விசாரணை நடத்தி உண்மையான விடயங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவர்கள் சமர்ப்பித்துள்ளனர் என்பதனை முதலில் குறிப்பிட வேண்டும். சட்டமா அதிபர் ஏற்கனவே குற்றவாளிகள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளார். நாடு முழுவதிலுமுள்ள பல மேல்நீதிமன்றங்களில் சுமார் 27 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நௌபர் மௌலவி உட்பட 24 முக்கிய குற்றவாளிகள் தொடர்பாக தீர்ப்பாயம் நிறுவப்பட்டு தினமும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

எங்களால் முடிந்ததை செய்துள்ளோம். சர்வதேச சமூகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு செல்வதற்கு எவருக்கும் சுதந்திரம் உள்ளது.பொலிசார் விசாரணைகளை நடத்தியதற்காக கர்தினால் மிகுந்த மரியாதை தெரிவிக்க வேண்டும். பொலிசார் தீவிரவாதிகளை கண்காணித்து வருகின்றனர். ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடைய அனைவரையும் கைது செய்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு சிலரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் உட்பட சில பெயர்கள் உள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சட்டமா அதிபரே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் துறைசார் கண்காணிப்புக் குழு போன்ற பல குழுக்களாலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. அத்தடன் குற்றத் தடுப்புப் பிரிவினர், பயங்கரவாத தடுப்பு பிரிவினராலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் பரிந்துரைகளை மையப்படுத்தியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்கு முன்னர் கண்டி, குருநாகல், புத்தளம் மற்றும் கேகாலை உள்ளிட்ட ஐந்து மேல் நீதிமன்றங்களில் ஒன்பது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்தச் சம்பவத்துடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவர் மீதும் சட்டமா அதிபர் வழக்குகளை பதிவு செய்துள்ளார். குற்றவாளிகளை தண்டிப்பது நீதித் துறையின் கைகளில் உள்ளது. இப்படி நடந்து கொண்டிருக்கும் போது யாரும் குறை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும், தற்போதைய அரசாங்கம் அல்ல.

கே: அண்மையில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. விசாரணைகளின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது?

பதில்: விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவத்திற்கு உடந்தையானவர்கள் யார் என்பதனை கண்டுபிடித்து அந்த கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவாலயத்தில் பணிபுரியும் ஒரு தமிழ் நபரை கைது செய்ததற்காக தேவாலயத்தினர் பொலிசார் மீது தவறு காண்கின்றனர். உதாரணமாக பொலிசார் அங்கு சென்று விசாரணைகளை நடத்தினர். சிசிரீவி காட்சிகளை அவதானித்து விசாரித்த போது அந்த நபர் கைக்குண்டை எடுத்து பலிபீடத்தில் வைத்திருப்பதைக் காண முடிந்தது. அதன் பின்னர் வெடிகுண்டு அகற்றப்பட்டது. பின்னர் அவரது அறையை பரிசோதனை செய்த போது வெடிகுண்டை சுற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட செலோ டேப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் அவரை பொலிசார் கைது செய்தனர். எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. அனைவரும் விடுவிக்கப்படவும் மாட்டார்கள். சந்தேகத்தின் பேரில் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளோம். சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்வதை யாரும் தவறு என்று கூற முடியாது. இன்னும் விசாரணைகள் முடியவில்லை. எனவே பொலிசார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறானதாகும்.

ஜனவரி 11ஆம் திகதி பொலிசாரிடம் கோப்புப்பிரதிகள் கொண்டு வரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, அதே தினம் 9.30 மணியளவில் சம்பவம் தொடர்பில் இன்னுமொருவரின் பெயரும் அம்பலமானது. இதனால் பொலிஸ் துறையினரால் விசாரணை நான்கைந்து நாட்கள் பின்னோக்கி நகர்ந்தது. இல்லையெனில் சம்பவம் பற்றிய அனைத்து விபரங்களையும் நாங்கள் கண்டுபிடித்திருப்போம். இந்தச் சம்பவங்கள் ஊடகங்களில் வெளியானதும், குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு குற்றத்தை ஊடகங்கள் அம்பலப்படுத்தினால் குற்றவாளிகள் மறைந்துவிடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் அதிகம்.

கே: ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவைக்கு அரசாங்கம் எவ்வாறு தயாராக உள்ளது?

பதில்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நாம் ஏற்கனவே வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுள்ளோம் என்பது வெளிப்படையானது. இவை அனைத்தும் 2014இல் இலங்கை மீதான விசாரணையின் அறிக்கையின் விளைவினால் தொடங்கியது. பின்னர் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் ஸையிட் அல் ஹூசைனுக்கு விசாரணை அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மேலும் அவர் 8 விடயங்களின் அடிப்படையில் எங்களை குற்றம்சாட்டினார். மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை மீறியதாக நல்லாட்சி அரசாங்கத்தின் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கையின் அடிப்படையில் எமக்கெதிரான 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டிருந்தது. அதனால்தான் உலகளாவிய இலங்கை மன்றம் மற்றும் உள்ளூர் நாட்டுப்பற்றாளர்களின் உதவியுடன் நான் ஜெனீவாவுக்கு சென்றிருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட மிகக் குறுகிய நேரத்திற்குள் எங்கள் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தினையும் மறுத்து திடகாத்திரமான தகவல்களை வழங்கியிருந்தேன்.

மேலும், சேர் டெஸ்மண்ட் த சில்வா கியூசி, சேர் ஜெப்ரி நைஸ் கியூசி, பேராசிரியர் மைக்கல் நியுட்டன், பேராசிரியர் மைக்கல் கிரேன் மற்றும் ரொட்னி டிக்சன் கியூசி, மேஜர் ஜெனரல் ஜோன் ஹோம்ஸ் போன்ற ஆறு உலகப்புகழ் பெற்ற போர்க்குற்ற நிபுணர்கள் தொகுத்த அறிக்கைகளை நான் சமர்ப்பித்தேன். நாங்கள் எவ்வித போர்க்குற்றங்களும் செய்யவில்லை என்று மிகத் தெளிவான அறிக்கையினை அந்நிபுணர்கள் வழங்கியிருந்தார்கள். பிறகு ஏன் இம்மாதிரியான அணுகுமுறை எம் மீது பிரயோகிக்கப்பட்டது?

உதாரணமாக, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரால் சாகி கலகே (ஒய்வு) மற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா (ஓய்வு) ஆகியோருக்கு விசா மறுக்கப்படுகின்றது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எவை? இதன் பின்னணியில் உள்ள சட்டம் மற்றும் தர்க்கங்கள் எவை? இது மிகவும் தவறானது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பெச்லட் அனுப்பிய பல அறிக்கைகளை நாங்கள் நிராகரித்துள்ளோம். இந்த குற்றச்சாட்டுகள் உண்மைகள் இல்லை என்பதனால் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம்.

ஐக்கிய இராச்சியம் தலைமையிலான உபகுழு எங்களை இவ்வாறு சங்கடப்படுத்துவது நியாயமற்றது. நான் ஜெனீவாவில் இருந்த போது அப்போதைய பிரதமர் தெரேசா மே பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் தனது இராணுவ வீரர்களின் பாதுகாப்பு விஷயத்தில் மனித உரிமைச்சட்டங்களை திருத்துகின்ற அளவிற்கு செல்வேன் என்று கூறியது இன்னும் எனக்கு நினைவிருக்கின்றது. இந்த மேற்கத்தேய தலைவர்களில் சிலர் இவ்வாறுதான் நடந்து கொள்கின்றார்கள். உங்களால் பயங்கரவாதத்தினை நியாயப்படுத்த முடியாது. நீங்கள் அதனை நசுக்க வேண்டும். அதனால்தான் இன்று நாட்டில் அமைதி நிலவுகின்றது. 300000 தமிழ் மக்களை மனித கேடயமாக வைத்திருக்கும் போது இந்த மனித உரிமைகள் அமைப்புகள் எனப்படும் அமைப்புகள் எங்கே இருந்தன? அந்த நேரம் இங்கிலாந்து, உபகுழுவிலுள்ள நாடுகள் எங்கே இருந்தன? 3000 சிறுவர்களை சிப்பாய்களாக புலிகள் ஆட்சேர்ப்பு செய்த போது இவர்கள் எதிர்த்தார்களா? என்ன செய்தார்கள்? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்கிற வகையில் இது மிகவும் நியாயமற்றது என்று கூற விரும்புகின்றேன். இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.

கே: இலங்கை உணவு நெருக்கடியை நோக்கிச் செல்வதாக சில சர்வதேச ஊடகங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன. இதில் ஏதேனும் உண்மைகள் உள்ளதா?

பதில்: நமது நாடு விவசாய நாடு. நமது நாட்டில் உணவுப்பற்றாக்குறை இருக்காது. நாம் எதனையாவது வளர்த்தால் அது நிச்சயமாக வளரும். நமது நாடு உணவு நெருக்கடியை சந்திக்காது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டங்களிலும் இதுபற்றி கலந்துரையாடப்படுகின்றது.

கே: நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை நாட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதா?

பதில்: இது முழுக்க முழுக்க நிதியமைச்சுடன் தொடர்புடையது. அவர்கள்தான் பொருளாதார விடயங்களை கையாளுகின்றனர். வேறு யாரையும் விட அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சர்வதேச நாணய நிதியத்திடம் பணம் வாங்கினால் சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும், நாங்கள் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைக்கு உட்பட வேண்டும் என்பது பற்றி. அந்த நிபந்தனைக்கு உட்பட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்கிறோமா அல்லது தனித்து நின்று நமது பொருளாதாரத்தினை நிர்வகிக்க முயற்சிக்கின்றோமா என்று ஒரு சமரசத்திற்கு சென்று பார்க்க வேண்டும். இது குறித்து நிதி அமைச்சர் முடிவுகளை எடுப்பார்.

கே: கொவிட் - 19 தடுப்பூசி செலுத்தலின் ஆண்டு நிறைவு ஜனவரி 29 இல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி திட்டத்தின் வெற்றியை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: வளர்ச்சியடைந்த நாடுகளை விட கொவிட் -19 தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மிகச் சில நாடுகளில் இலங்கையும் ஒன்று. இந்த தடுப்பூசியை நாங்கள் தயாரிக்கவில்லை, இருந்தாலும் முதலாவது தடுப்பூசியை மக்கள் தொகையில் சுமார் நூறு சதவீதம் பேர் பெற்றுக் கொண்டனர். இரண்டாவது தடுப்பூசியை 94 சதவீதம் பேர் பெற்றுக் கொண்டனர். 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். எமது மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக தனிப்பட்ட முறையில் இம்முயற்சியினை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கே இந்த பெருமை சேர வேண்டும். அதனை மக்கள் பாராட்டவேண்டும். எதிர்க்கட்சிகள் எதுவும் இந்த நடவடிக்கையினை பாராட்டியதாக நான் காணவில்லை. எல்லாவற்றையும் விட மக்களின் உயிர்களே முக்கியம். அத்தகைய முயற்சியை மேற்கொண்ட ஜனாதிபதியே பெருமைக்குரியவர். ஜனாதிபதியினால் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து தொற்றுநோயை நன்கு நிர்வகிக்க முடிந்தது. தடுப்பூசி திட்டத்தினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 5நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது.

கே: சில கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஊடகங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதனால் அரசாங்கத்திற்குள் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளனவா?

பதில்: அவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் சொந்தக்காரர்கள். அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. ஆனால் முடிவெடுக்கும் போது அவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் முடிவுகளை ஆதரிக்க வேண்டும். அத்தகைய முடிவு எடுக்கப்படும் வரை அவர்கள் தங்கள் கருத்துக்களை விமர்சிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ சுதந்திரமாக உள்ளனர். அதுதான் உண்மையான ஜனநாயகம். ஜனாதிபதி அந்த சுதந்திரத்தை அனைவருக்கும் வழங்கியுள்ளார். எது எவ்வாறாயினும், ஒரு முடிவை எடுத்தவுடன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் அந்த முடிவு அனைத்து உண்மைகளை கருத்திற் கொண்டு எடுக்கப்படுகின்றது. அந்த ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை யாராவது கடைப்பிடிக்க விரும்பவில்லை என்றால் அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம். அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் அடியோடு இல்லை. ஒவ்வொருவரும் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவினை நல்குதல் வேண்டும். அப்போதுதான் நாம் திட்டமிட்டபடி முன்னேற முடியும். நமக்கு இன்னும் சில வருடங்கள் உள்ளன. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் தொடக்க நிகழ்வில் ஜனாதிபதி கூறியதுபோல் கடந்த இரண்டு வருடங்களில் தொற்று நோய் காரணமாக மேற்கொள்ள முடியாது போன விடயங்களை இந்த மூன்று ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும்.

-ஆங்கிலத்தில்: உதித்த குமாரசிங்க

-தமிழில்: றிசாத் ஏ. காதர்...?


Add new comment

Or log in with...