லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமென தெரிவிப்பு

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமென தெரிவிப்பு-Lata Magneshkar COVID19

- வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை; மருத்துவமனை தகவல்

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவிட் தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், உலகம் முழுவதுமுள்ள லதா மங்கேஷ்கரின் ரசிகர்கள், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை மேற்கொள்ளத் தொடங்கினர். தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது. இதனால் கடந்த வாரம் வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது.

ஆனால், சனிக்கிழமை அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், "அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மீண்டும் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்" என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராகத் திகழும் லதா மங்கேஷ்கர், 1942-ல் தனது 13-வது வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கியவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுமிருக்கிறார். கிட்டத்தட்ட ஏழு தசாப்த கால இசை வாழ்க்கையில், பல்வேறு மறக்கமுடியாத கானங்களுக்கு தனது குரலால் உயிர்கொடுத்தவர் என்பதால், இந்தியாவின் 'மெலடி குயின்' என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார். பத்ம பூஷன், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாஹேப் பால்கே விருது மற்றும் பல கெளரவங்களை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...