பாராளுமன்றம் ஜனவரி 18 வரை ஒத்திவைப்பு; ஜனாதிபதி பிரகடனம்

பாராளுமன்றம் ஜனவரி 18 வரை ஒத்திவைப்பு; ஜனாதிபதி பிரகடனம்-Prorogue Parliament With Effect From Midnight of 12-12-2021

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து, ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, டிசம்பர் 12 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 2022 ஜனவரி 18ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்து, அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்போது பாராளுமன்றத்தினால் முறையாக பரிசீலனை செய்யப்படாத வினாக்கள் மற்றும் பிரேரணைகள் இரத்தாவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவை தொடர்பில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் விசேட குழுக்கள் (தெரிவுக் குழு) தவிர்ந்த ஏனைய குழுக்கள் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.

இதற்கமைய கடந்த 09ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறாது என்பதுடன், ஜனவரி 18ஆம் திகதி புத்தாண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும்.

PDF File: